நட்சத்திர பாப்பாத்தி

ல்லாம் முடிஞ்சிருச்சாம்..

அப்படித்தான் பெரியத்தை சித்திகிட்ட சொன்னாங்க.

எது எல்லாம் முடிஞ்சிருச்சுன்னு எனக்குப் புரியலை. காலையில் கணக்கு வகுப்பு நடக்கும் போது பாதியிலேயே பள்ளிக் கூடத்திலிருந்து கூட்டிக்கிட்டு வந்துட்டாங்க.

என்னா விசியமின்னு கேட்டா யாரும் பதில் சொல்லலை. அம்மாவைக் காணலை. எதுவும் பேசாமே அப்பா தான் கூட்டிக்கிட்டுப் போனார். எப்போதும் போல வண்டியில் ஏறினதும் நா தூங்கிட்டேன். வண்டி நின்னதும் தான் தெரிஞ்சது நாங்க அம்மாச்சி(அம்மாவின் அம்மா) தாத்தா வீட்டுக்கு வந்தது.

அம்மாச்சி வீட்டு வாசலில் இருந்து அந்த தெரு முக்கு வரையிலும் கொட்டகை போட்டு லைட் கட்டியிருந்தது. வருஷம் ஒரு தடவை மாரியம்மன் கோவில் திருவிழா அப்ப தான் இந்த மாதிரி கொட்டகை போடுவாங்க. நாங்கல்லாம் வெயில் தெரியாம ஜாலியா வெளாடுவோம்.

இப்ப என்ன திருவிழான்னு தெரியலையே? ஆனா ஏதோ விசியமிருக்கு. பெரியவங்க எப்போதும் என்னப்போல சின்னப் புள்ளைங்க கிட்ட எதுவும் சொல்ல மாட்டாங்க. வழக்கம் போல நானாத்தான் கண்டுபிடிக்கணும் போலிருக்குன்னு நெனச்சுக்கிட்டே நடந்தேன்.

வாசல மறச்சு ஆளுங்க உக்காந்திருந்தாங்க.

நிறைய்ய பேர்.

நா விறு விறுனு உள்ள போனேன். நடுவீட்ல தாத்தா மர நாற்காலில உக்காந்திருந்தார். அவரைச் சுத்தி எல்லாரும் உக்காந்து ஊ..ஊன்னு அழுதிட்டிருந்தாங்க.

தாத்தா சிரிச்சுட்டுன்னா இருக்கார்? இவங்க ஏன் அழறாங்க? எனக்குப்புரியல. கேட்டா நீ சின்னப்பொண்ணுன்னு திட்டுவாங்க. ஆனா தாத்தா முகத்தில தான் புதுசா வாய்க்கு கீழ வெள்ளத்துணியைத் தூளிமாதிரி கட்டி வச்சிருந்தாங்க. பார்க்க சிரிப்பாய் இருந்துச்சு. அதுக்குத் தான் தாத்தா கூட சிரிக்கிறாரோ?

அது சரி, எதுக்கு தாத்தா ஒரு ரூபா காசைப் போய் நெத்தியில் ஒட்டி வச்சிருக்கார்?

போய்யா..ஒத்த ரூவாய்க்கு லாயக்கில்ல” என்று அம்மாச்சி அடிக்கடி தாத்தாவை வைய்யுமே. இதோ பார் என்கிட்ட ஒரு ரூபாய்னு காட்டத்தான் ஒட்டி வச்சிருக்காரோ?

இப்ப தாத்தாகிட்ட ஒத்த ரூபா இருக்கே, அதனால தான் அம்மாச்சி அழுவுதா?
அம்மாச்சி மட்டுமா? எல்லாரும் அழறாங்க. இதுக்குப் போயா எல்லாரும் அழுவுறாங்க?

இந்த பெரியவங்களே இப்டித்தான் எதெதுக்கு அழுவுறதுன்னே தெரியாது. நா(ன்) தாத்தா பக்கம் போகலை. ஆனா அத்தை என்னைப் பிடிச்சு தள்ளிவிட்டுட்டாங்க. நா பொத்துனு அம்மாச்சி மடியில போய் விழுந்தேன்.

“அய்யய்ய்யோ..என் தங்கமே” அம்மாச்சி கத்தவும் எனக்கு பயம் வந்துருச்சு. எழுந்து குடுகுடுன்னு ஓடிப்போய் பெரியத்தை பின்னாடி ஒளிஞ்சுகிட்டேன்.

ரொம்ப ரொம்ப பயமா இருந்துச்சு. ஏன் இப்டி பண்றாங்கன்னு கோவம் கோவமா வந்துச்சு.

அங்கிருக்கப்பிடிக்காம பக்கத்து ரூம் போனேன். அங்க அம்மா, பெரியம்மா எல்லாரும் மயங்கிப்போய் கிடந்தாங்க.

பெரியக்கா அம்மாவுக்கு நீர் மோர் குடுத்து கிட்டிருந்துச்சு. “அம்மா..அம்மா”

“சின்ன குட்டி அப்புறமா வா. அம்மா அசதியா தூங்கறா”ன்னு சொன்ன சின்னப்பாட்டி, என்னை அம்மா பக்கத்தில் போக விடலை.

“போ பாட்டி”ன்னு சொல்லி பாட்டிக்கு ’கா’ விட்டுட்டு அடுத்த ரூமுக்கு ஓடினேன்.
அங்கே சின்னக்கா கண்ணெல்லாம் வீங்கிப்போய் உக்காந்து இருந்துச்சு. அக்கா என்னையே பாத்துச்சு ( நா அழுவறனா இல்லையான்னு பாக்குதோ?)

அங்கிருந்து ஜன்னல் வழியா வெளி வாசல் நல்லாத்தெரியும். எட்டிப்பார்த்தேன். வாசல் பக்கமா ஓலை வச்சி பாய் பின்னிக்கிட்டிருந்தாங்க. நா ஜன்னலுக்குப் பின்னாடி கை விட்டு ஓலை கிளுகிளுப்பையை எடுத்தேன்.

இத தாத்தா தான் செஞ்சு தந்தார். இந்த மாதிரி இன்னும் நிறைய செய்வார். ஆனா தாத்தா இது போல ஓலைல பாய் பின்னி நா பாத்ததில்லை.

அந்த புது ஓலைப்பாய்க்கு பக்கமே ஒரு மோட்டர் வண்டி மேல நெறய நெறய சாமந்தி, ரோசா எல்லாம் கொட்டி அழகா பல்லாக்கு செஞ்சிகிட்டிருந்தாங்க. பார்க்க ரொம்ப அழகா இருந்தது. ”அது என்னக்கா?” சின்னக்கா கிட்ட ஓடி வந்து கேட்டேன்.

“ம்ம்.. வந்து அதுல தான் தாத்தா போகப்போறாராம்”

“தாத்தாவா?” என்னால நம்ப முடியல. தெனைக்கும்(தினமும்) ஒரு பழைய சைக்கிளில் தான் தாத்தா மில்லுக்கு போவாரு. இப்பத்தான் மொத தடவை இவ்வளவு பெரிய வண்டியில போகப்போறாரு.

அதான் அப்படி சிரிச்சுகிட்டே இருக்கார் போல. ஆனா அது மிச்ச யாருக்கும் தெரியலயே? ஒரு வேள அவரு மட்டும் போறாரோ? இவங்களை எல்லாம் கூட்டிட்டு போகலைன்னு தான் அழுவுறாங்களோ? அதான் இவ்வளவு பெரிய வண்டியா இருக்கே. இந்த தாத்தா அம்மாச்சியையும் கூட்டிட்டு போலாம்ல? தாத்தா எப்பவுமே இப்டித்தான்.

வேடிக்கையா எதாவது செஞ்சு அம்மாச்சியை கோவப்படுத்திட்டு என்னிய பாத்து கண்ணடிச்சு சிரிப்பார். இப்பமும் அப்படித்தான் செய்யிறாரோ? ஓடிப்போய் தாத்தாவைப்பாத்தேன்.

ம்ஹ்ம்.. கண்ணு மூடில்ல இருக்கு?

திடீர்னு ஓ..ன்னு சத்தம்.

மெட்ராஸிலிருந்து மாமா வந்தாச்சாம்.

“அய்யோ..அப்பா..அப்பா..என்ன விட்டுப் போறியாப்பா??” மாமா மாரிலடிச்சுக்கிட்டு ஓடி வந்து அழுதார்.
மாமாவுக்குமா பல்லக்கு வண்டியில் போக ஆசை?

ச்ச..இந்த தாத்தா இப்பத் தானே மொத தடவை போறார். போகட்டும் நாம பின்னாடி போய்க்கிடலாம்னு யாருக்காவது தோணுதா பாரு? சொன்னா நீ சின்னப் பொண்ணு உனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு சொல்வாங்க. ம்ம்..

நா மறுபடியும் ஓடிப்போய் ஜன்னல்கிட்ட நின்னுகிட்டேன்.எப்பவும் வராத அப்பாவே இன்னிக்கு வந்திருக்கார், அதுக்காவது இந்த அம்மாச்சி அழாம சிரிக்கலாம்ல? அப்பா வாசலில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் தான் உக்காந்திருந்தார்.

அந்த பெஞ்சுக்கு கால் ஒடஞ்சு போய், போன காப்பரீட்சை லீவுக்கு வந்தபோது தான் அம்மாச்சியும் தாத்தாவுமாச் சேர்ந்து கல்லு முண்டக்குடுத்து ஒக்கிட்டாங்க(பழுது பார்த்தார்கள்).

அப்பாவைச் சுத்தி நிறைய பேர். எல்லாரும் தாத்தாவோட மில்லுல வேலை பாக்கறவங்களாம்.

..தாத்தா எப்டி புது பல்லக்கு வண்டில போறாருன்னு பாக்க வந்திருக்காங்க போலிருக்கு.

வர வர சத்தம் அதிகமா ஆகுது. புதுசு புதுசா ஆள் வந்து தெரு முக்கிலிருந்தே அழுதுகிட்டு ஓடி வந்து விழறாங்க.

வீடே அழுவுது.

ஃபேன் கூட அது ஒப்புக்கு க்ரீன்..க்ரீன்னு சத்தம் போட்டு அழுவுது.

என்ன ஆச்சு எல்லாருக்கும்? ஏன் இப்டி சின்னப்புள்ளத் தனமா இருக்காங்க?

அழுதுகிட்டே வெளில வந்த மாமா காதில் அப்பா என்னவோ சொல்லவும் மாமா வாயை துண்டால பொத்திட்டு குலுங்கி குலுங்கி அழுதாரு.

அவர் தலையைச் சுத்தி ஒரு செவப்பு பாப்பாத்தி(வண்ணத்துப்பூச்சி) சுத்துச்சு..

பாப்பாத்தி

அப்பல்லாம் ரெண்டாப்பு புள்ளைகளுக்கு சனிக்கெழமை வந்தாலே ஜாலி தான்.
நாள் முழுக்க வெளாடிட்டே இருப்போம்.

நா, எதித்த வீட்டு கீதா, டீச்சரக்கா மக பூங்குழலி, பக்கத்து சந்து பழனி எல்லாருமா எங்க வீட்டுக்கு எதித்தாப்ல நாடு பிரிச்சு ஆடிட்டிருந்தோம். பழனி தான் ரூல்ஸ் எல்லாம் சொல்லுவான்.

அவனுக்கு நிறைய வெளாட்டு(விளையாட்டு) தெரியும். ஈரோட்ல தெனம் ஒரு வெளாட்டு வெளாடுவாங்களாம். புதுசு புதுசா சொல்லிக் கொடுப்பான்.

”கோடு போட்டு நாடு பிடிக்கட்டா?” கண்ணைப் பொத்திக்கிட்டு நா கேட்டேன்.

“பிடிச்சுக்கோ..பிடிச்சுக்கோ”ன்னு கத்தினாங்க.
கையிலிருந்த சில்லாக்கை(உடைத்த தேங்காய் மூடியின் சில்) திரும்பாம நின்னு பின் பக்கமா தூக்கி எரிஞ்சேன். திரும்பி பாத்தேன்.

சில்லாக்கா ரொம்ப தூரத்துல கெடந்துச்சு. நா என் நாட்டுல இருந்து கால் பரப்பி நின்னு குச்சி வச்சு அந்த சில்லாக்கா இருந்த இடம் வரை கோடு கிழிச்சுட்டா அது அவ்வளவும் என் நாடு. எவ்வளவு முடியுமோ அவ்வளவு எடுத்துக்கலாம்.

ஆனா சில்லாக்கா வேறொருத்தர் நாட்டுல விழுந்துட்டா அவங்க எடத்திலிருந்து என் நாட்டுல கோடு கிழிச்சு எவ்வளவு முடியுமோ அவ்வளவு எடுத்துக்கலாம்.

நா சரியா கால் வச்சு ரொம்ப தூரம் கோடு கிழிச்சு பெரிய நாடு வாங்கிக்கிட்டேன். நாடு கெடச்ச சந்தோஷத்தில கை நீட்டி பாவாடை ராட்டினம் சுத்தினேன்.

பட்டுனு கைல பட்டுது என்னவோ. நின்னு பாத்தேன். பக்கத்து எருக்கலஞ்செடில இருந்த நெச்சத்திர(நட்சத்திர) பாப்பாத்தி கீழ கெடந்துச்சு.

நெச்சத்திர பாப்பாத்தின்னா எல்லாருக்கும் தெரியும். பெரிசா கருப்பு கலர்ல பெரிய பெரிய செவப்பு, வெள்ளை நெச்சத்திரம் போட்டிருக்கும்,பாக்க ரொம்ப அழகா இருக்கும். இருக்கறதுலயே பெரிய பாப்பாத்தி இந்த நெச்சத்திர பாப்பாத்தி தான்.

“போச்சு.. போச்சு.. பாப்பாத்திய கொன்னுப்பிட்ட” பழனி கோவத்துல கத்துறான்.

நா குனிஞ்சு பாப்பாத்திய எடுக்குறேன்.அது ஒரு பக்கம் லொடக்.லொடக்னு அடுச்சுக்குது.

“அய்ய்யோ..பாவம்டி அது ஒரு கைய ஒடச்சுப்பிட்ட” கைய ஒதறி ஒதறி அழுதா பூங்குழலி.

பாப்பாத்திய எடுத்துக்கிட்டு நா ஓட்டமா ஓடினேன் வீட்டுக்குள்ள. சமயக்கட்டுல அம்மா எண்ணைக் கத்திரிக்கா குழம்பு வெச்சிட்டிருந்தாங்க. “என்னடி இப்டி மூச்சு வாங்க ஓடியாற? என்ன ஆச்சு?”

“அம்மா அம்மா வெளாடும் போது தெரியாம நெச்சத்திர பாப்பாத்திய அடிச்சுட்டேம்மா. அதோட கை ஒண்ணு ஒடஞ்சுருச்சும்மா. பாரும்மா எப்படி துடிக்குது அதுனால இனி பறக்க முடியாதாம்மா?” முடிக்குமுன்னே ஓன்னு அழுதுட்டேன். அம்மா சேலை தலைப்பால என் கண்ணைத் தொடச்சுவிட்டு சொன்னாங்க.

“ஒண்ணும் ஆகுதுடி பாப்பாத்திக்கு.. அத வெளில விட்டுரு அதுக்கு சரியாப்போயிடும்”

“ம்ம்ஹ்ம்.. இதுனால பறக்க முடியாதில்ல? அப்பறம் கீதா விட்டு நாய் பிடிச்சுட்டா? வேணாம்மா பாப்பாத்தி கை சரியாகுந்தண்டி நம்ம வீட்டுலயே இருக்கட்டும்”

சொல்லிட்டு வடை பண்ண வச்சிருந்த வாழைப்பூவோட மட்டையைத் தூக்கிட்டு பெட்ரூம் ஓடினேன். அங்க கதவுக்கு பின்னால ட்ரெஸ் மாத்துற இடத்துல ஒரு சின்ன திண்டு இருக்கும். அது பக்கத்துல சப்பணம்போட்டு உக்காந்து பாவாடையை தூளியாட்டம் பிடிச்சுகிட்டு அதுல பாப்பாத்தியை படுக்கப்போட்டேன்.

வாழைப்பூ மட்டையை மடிச்சு மெத்தை மாதிரி செஞ்சு திண்டுல வச்சு அதுல பாப்பாத்தியை படுக்கப்போட்டுட்டு வெளில ஓடினேன்.

வாசல்ல இருந்த வேப்பமர நிழல்ல நெறய முறுக்குப்பூ பூக்கும். வெள்ளைக் கலர்ல சின்னதாய் இருக்கும்.

ஒண்ணு மேல் ஒண்ணு குத்தி முறுக்கு செஞ்சு வெளாடுவோம். அதில் நிறை தேன் இருக்குமாம். கலர் கலரா தினம் நிறைய பாப்பாத்தி வரும்.

முறுக்குப்பூ நிறைய பறிச்சுக்கிட்டு வந்து பாப்பாத்திகிட்ட போட்டுட்டு கதவுக்கு பின்னாடி நின்னு பாத்தேன்.

பாப்பாத்தி சாப்பிடல.

ரெண்டு நாளா தெனம் காலைல பள்ளிக்கூடம் போகுமுந்தி, மதியானம், சாயந்திரம் வந்ததுமான்னு அப்பப்ப முறுக்குப்பூவும் தண்ணியும் வைப்பேன்.

பாப்பாத்தி சாப்பிடல.

மூணா நாள் சாய்ந்திரம் பைக்கட்டோட ஓடியாந்து பாப்பாத்தியப் பாத்தேன். முறுக்குப்பூ அப்படியே இருந்துச்சு. பாப்பாத்தி அசையாமக் கிடந்துச்சு.

ஓடிப்போய் அம்மாவை கூட்டிட்டு வந்து காட்டினேன்.
அம்மா பாத்துட்டு சொன்னாங்க. “ம்ச்..பாப்பாத்தி செத்துப் போச்சுடி.. பாப்பாத்தியை சாமி கூப்பிட்டுக்கிட்டார்டி”


பூ…..ம். டிங்..டிங்..டிங்..

திடீர்னு எல்லாரும் ரொம்ப சத்தமா அழுதாங்க. பாப்பாத்தி கதை மறந்து வெளில ஓடி வந்து பாத்தேன்.

ஐ..தாத்தாவோட பல்லக்கு வண்டி கெளம்பிருச்சு. நா வேகமா டாட்டா காட்டினேன். அம்மா ஓடி வந்து என்னைக் கட்டிக்கிட்டு அழுதாங்க.

“அய்யோ..பாருடி..
உங்க தாத்தாவைப் பாருடி..
நம்ம விட்டுப் போறாரு பாருடி..
சாமி அவர கூப்டுகிட்டாருடி

”நெச்சத்திர பாப்பாத்தி மாதிரியா??”

ரொம்ப நேரம் அழுதேன் அம்மா முந்தானையப் பிடிச்சுக்கிட்டு..
Comments | edit post


Visit blogadda.com to discover Indian blogs