வாராறு வாராறு அழகரய்யா வாராறு..

வாராறு வாராறு அழகரய்யா வாராறு..
காடு மேடு கடந்து மதுரை சீமைக்குத்தேன் வாராறு


பல்லாக்கு மீனாட்சியைப் பாக்கத்தானே வாராறு
தங்கச்சி கல்யாணத்தைக் காங்கத்தானே வாராறு


கள்ளரோடு கலகலத்து கள்ளழகர் வாராறு
கஷ்டங்கவலை துக்கங்குறை துரத்தியடிக்க வாராறு


வைகையாத்தில் கால் பதிச்சு வளம் பெருக்க வாராறு
சித்திரை மாசத்தில் வீதியெங்கும் சிரிச்சிக்கிட்டே வாராறு


தங்கக் குதிரையிலே தகதகன்னு வாராறு
பச்சையுடுத்திக்கிட்டு பளபளன்னு வாராறு


சூடிக்கொடுத்த மாலை தாங்கி சப்பரமேறி வாராறு
வண்டியூரில் தவளையத்தான் தவசியாக்கி வாராறு


ஆயிரமாயிரம் மண்டகப்படி அளந்துகிட்டே வாராறு
ஆணழகன் சொக்கனப்பாத்து ஆசி கொடுக்க வாராறு


மதுரையே மஞ்சக்குளிச்சு மலர்ந்து கெடக்கு வாசம் பாரு
வீதியெல்லாம் மக்கள் வெள்ளம், பனங்கெழங்கு, கரும்பு சாறு


தண்ணிப்பீச்சு,ஓலை விசிறி, பந்தல்,சர்பத், பொங்கல் சோறு
கொழாய்கட்டி அழகர் பாட்டு, தண்ணிப்பீச்சுக்காரனுக்கு தலையக்காட்டுவிசிறி,கொடி,யானை,குடை,விளக்கு வீதியில் வருகையிலே
மனசு கெடந்து தவிக்குதடி அழகர் காணும் ஏக்கத்திலே


அதா வாராறு பாருங்கடி அந்தாமுகம் தெரியுது ஒசரத்திலே
கண் சுருக்கிப்பாத்தாக்க கை தெரியுது மாலைக்குள்ளே


ஆத்தாடி! எறங்கிப்பிட்டார் வைகையில் தான் பாருங்கடி
குதிரை கொஞ்சம் குலுங்கையிலே கூக்குரலைக் கேளுங்கடி


வைகை பெருகியோடுதடி மக்கசனம் கூட்டத்திலே

மனசெல்லாம் பொங்குதடி தங்கக்குதிரை போடும் ஆட்டத்திலே
எட்டு ஊரும் மயங்கிக்கிடக்கு மாயவனின் கட்டுக்குள்ளே
நம்ம உசுரெல்லாம் கெறங்கிக்கெடக்கு அவன் ஒத்த சுழி சிரிப்பிலே


தெருவெல்லாம் ஜொலிக்குதடி மா(சர்க்கரை)விளக்கு தீபத்திலே
காதில் தேன் பாயுதடி கோவிந்த நாம கோஷத்திலே
நல்லா இருங்கா மக்கா என்றவன் சொல்வது கேக்குது காதுக்குள்ளே
மீண்டும் அடுத்த வருஷம் வாரேனென்று கைகாட்டிப்போறான் ஊருக்குள்ளே


கண்ணத் தொறந்து பாத்துக்கிறேன் கையிலிருக்கும் போட்டோவிலே
அடுத்த வருஷமாவது அழகா உன்னைக் காணவேணும் நெசத்திலே
P.S:

இன்று சித்திரைத் திருவிழாவின் நாயகன் அழகர்மலையான் வைகையில் இறங்கி அருள் புரியும் நாள்.

14ஆம் தேதி பட்டாபிஷேகம் ஏற்று 16ஆம் தேதி திருக்கல்யாணம் கண்ட தங்கை மீனாட்சியைக்காண அழகர் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரும் நாள் இந்த நாள்.

சொக்கன் அருளால் போலியாக வெள்ளிக்குதிரையில் அழகர்போல வீரராகவர் வீற்றிருக்க நடந்து முடிந்த கல்யாணத்தைப் பற்றிக்கேளிவியுற்று அழகர் அழகாய்க் கோபம் கொண்டு திரும்பும் அழகான காட்சியை நேரில் காண முடியாத என் போன்ற அன்பர்கள் திருத்தேர் உர்ச்சவம் வரை தினமலர் ஆன்லைனில் கண்டு ரசிக்கலாம்.

விரைவில் யூடியூபில் களைகட்டும் என்ற நம்பிக்கையில்...

Visit blogadda.com to discover Indian blogs